Wednesday 9 April 2014

மிட்டாய்க்கு ஆசைப்பட்டு முட்டுசந்தில் மாட்டிய கதை



அப்போ எனக்கு ஒரு இரண்டரை வயசு இருக்கும். என்னோட அம்மாவுக்கு அப்போ ஒரு குட்டி பெண் குழந்தை பிறந்திருந்தா அதாவது எனக்கு தங்கச்சி பாப்பா. அது வேற சரியான அழுமூஞ்சி பாப்பா அதனால அம்மா எப்போ பார்த்தாலும் அந்த பாப்பாவையே பார்த்துகிட்டு இருந்தாங்களாம். அதனால என்னை அவங்களால சரியா கவனிச்சிக்க முடியல. நான் எங்கயாவது கீழ விழுந்துட்டா கூட அம்மா கையில பாப்பாவ வைச்சிகிட்டு அங்க இருந்தே எழுந்து வா அழாத அப்படின்னு தான் சமாதானப்படுத்துவாங்களாம். இப்படி இருந்த காலக் கட்டத்தில தான் என்னோட அக்கா அதாவது என்னோட பெரியம்மா பொண்ணு கோடை விடுமுறைக்காக எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்களாம். அப்போ என்னை யாருமே கவனிச்சிக்க யாருமே இல்லாம நான் பாட்டுக்கு திரிஞ்சதையும் அம்மா கஷ்டப்பட்டதையும் பார்த்துட்டு சத்யாவ நான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் அவ அங்க இருந்துகிட்ட அங்கயே ஸ்கூல் சேர்த்துவிடுறேன்னு கூட்டிட்டு வந்துட்டாங்க. அவங்களே அப்போ எட்டாவது தான் படிச்சாங்கன்றது வேற கதை. நானும் பெரியம்மா வீட்டிக்கு வந்துட்டேனாம். அங்க எல்லாரும் என்னை ரொம்ப நல்லா பார்த்துகிட்டாங்க. நிறைய அண்ணன்கள் வேற ஆளாளுக்கு கடைக்கு கூட்டிட்டு போய் மிட்டாய், சாக்லேட் அது இது வாங்கி கொடுத்து ரொம்ப செல்லமா பார்த்துகிட்டாங்க. கவனிக்க யாருமே இல்லாம இருந்துட்டு இப்படி எல்லாரும் மாத்தி மாத்தி பார்த்துகிட்டது எனக்கு ரொம்ப பிடிச்சிடுச்சி போல நான் அழவே இல்லயாம். உடனே அங்கயே என்ன ஒரு ஸ்கூல்ல சேர்த்துட்டாங்க. சேர்த்தது தான் சேர்த்தாங்க தமிழ் மீடியம் சேர்த்திருக்க கூடாது இங்கிலீஷ் மீடியத்தில சேர்த்துட்டாங்க. அக்கா கிட்ட அப்பப்போ செமத்தயா அடி வாங்கி ஒரளவுக்கு நல்லா படிச்சேன். ஒரு வழியா அஞ்சாவது முடிச்சிட்டேன். அதுக்கப்பறம் சொந்தகாரங்க வீட்டுல விட வேணாம்ன்னு நினைச்சு எங்கப்பா என்னை எங்க ஊர்லயே ஸ்கூல்ல சேர்க்கலாம்ன்னு முடிவு பண்ணினார் ஆனா ஊர்ல தமிழ் மீடியம் மட்டும் தான் இருந்துச்சு. என் அண்ணன்கள் எல்லாம் சேர்ந்து என்னை இங்கிலீஷ் மீடியம் தான் சேர்க்கணும்ன்னு அப்பாகிட்ட சொல்லிட்டாங்க அப்ப தான் எதிர்காலம் நல்லாயிருக்குமாம்.. பாவிங்களா யார்டா உங்ககிட்ட அப்படி எல்லாம் சொன்னது. நான் தான் சின்ன வயசுலயே பெரியம்மா வீட்டுல அழாம இருந்திட்டேன்ல அதுனால ஹாஸ்டலயும் இருந்துப்பேனாம். அப்புறமென்ன என்னை ஆறாவதுலயே கொண்டு போய் ஹாஸ்டல்ல சேர்த்துட்டாங்க. எப்போ என்னை ஹாஸ்டலுக்கு யார் பார்க்க வந்தாலும் நிறைய சாக்லேட் வாங்கிட்டு வருவாங்க. அதை காட்டி காட்டியே தான் ஏமாத்திட்டாங்க… அப்போ ஆரம்பிச்ச ஹாஸ்டல் வாழ்க்கை இன்னும் தொடருது. என்னோட ஹாஸ்டல் வாழ்க்கையை மட்ம் கணக்கு பண்ணினா இப்போ வரைக்கும் பதினாலு வருஷம் ஒரு வனவாசம் மாதிரி. அப்பவே பெரியம்மா வீட்டுக்கு கூட்டிட்டு வந்தப்பவே மிட்டாய்க்கு ஆசைப்படாம அழுது அடம்பிடிச்சி வீட்டுக்கு ஓடி இருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா?

 இது தான் நான் மிட்டாய்க்கு ஆசைப்பட்டு ஹாஸ்டல் முட்டுசந்தில் மாட்டிய கதை…………

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.