Thursday 10 April 2014

ஆட்டோக்காரர்கள்



ஆட்டோக்காரர்கள் என்றாலே ஒரு பொதுவான கண்ணோட்டம் நம் எல்லோருக்குமே இருக்கிறது. இது எவ்வளவு பெரிய அபத்தம். எல்லா இடத்திலும் நல்லவர்கள், கெட்டவர்கள் கலந்தே இருக்கிறார்கள். ஒரு தொழிலை வைத்து அவர்கள் நல்லவர் அல்லது கெட்டவர் என்று அனுமானிக்கலாமா? அது முடியுமா?.. ஒவ்வொரு முறையும் வெளியூருக்கு கிளம்பும் போது வழியனுப்புபவர்கள் தவறாமல் கூறும் வார்த்தை ஆட்டோவில் போகும்போது கவனமாய் இரு என்பது தான். ஆனால் என் வாழ்வில் இதுவரை மோசமான ஆட்டோ டிரைவர்களை நான் சந்தித்ததே இல்லை.
திருநெல்வேலியில் படிக்கும் போது பஸ்ஸிலிருந்து இறங்கி பத்து நிமிடம் ஆட்டோவில் பயணித்து தான் காலேஜ் விடுதிக்கு செல்ல வேண்டும். எப்போதும் இரவு கிளம்பி விடியற்காலையில் தான் விடுதிக்கு செல்வேன். ஒரு முறை அந்த அதிகாலையில் வேறு வழியின்றி இருபது ரூபாய்க்கு ஐநூரு ரூபாயை பயத்தோடு நீட்டிய போது ‘வச்சிகல அடுத்த தடவ சேத்து வாங்கிக்கிடுதேன்’ என்று பயத்தை நீக்கி புன்னகை மலர செய்த ஆட்டோக்கார தாத்தா.
மதுரையில் ஒரு முறை நள்ளிரவில் பஸ்ரூட் தெரியாமல் பயத்தோடும் சந்தேகத்துடனும் ஆட்டோவில் ஏறி அமர்ந்த போது பத்திரமாக சேர வேண்டிய இடத்துக்கு அழைத்து சென்று விட்டுவிட்டு ‘ இப்படி நடுராத்திரியில எல்லாம் தனியா எங்கேயும் போகதம்மா’ என்று ஒரு தந்தையின் அக்கறையைக் கொட்டிவிட்டு போன ஆட்டோக்காரர்
ஒரு முறை தோழியை பாம்பு கடித்தபோது ஆட்டோவில் தான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து போனோம். அப்போதிருந்த அவசரத்திலும, குழப்பத்திலும் டிரைவரை சுத்தமாக மறந்து போனேன். மறுநாள் வழியில் பார்த்த போது ‘உன் பிரண்டு எப்படி இருக்கா?’ என்று அவர் இயல்பாய் கேட்க நான் குற்றவுணர்வுடன் ஐம்பது ரூபாயை எடுத்து தந்தபோது அதே காசில் எனக்கும் தோழிக்கும் டீ வாங்கி கொடுத்த அந்த ஆட்டோக்கார அண்ணன்… என என் வாழ்வில் நிறைய நல்ல ஆட்டோ டிரைவர்களையே சந்தித்திருக்கிறேன். யாராவது ஆட்டோ டிரைவர்களைப் பற்றி பொதுவாக தவறான கருத்தைச் சொல்லும் போதெல்லாம் மனசு கனத்து போகிறது. அவங்களும் நல்லவங்க தான் பாஸ் எண்ணத்தை மாத்திக்கோங்க

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.