Tuesday 8 April 2014

அப்பா



அப்பா இல்லாமல் போய் ஏழு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எல்லைகளற்ற தனிமையையும் தாண்டி, வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயம். பல நேரங்களில் அப்பாவின் பிரிவைத் தாங்கி கொள்ள முடியாமல் தவித்து கிடக்கிறேன். அவரிடம் உணர்ந்த பாதுகாப்பை வேறு யாரிடமும் உணர முடிந்ததே இல்லை. ஆறாம் வகுப்பில் இருந்தே விடுதியில் தங்கி படித்ததால் பெரும்பாலும் என்னை பார்க்க அப்பா தான் வருவார். அதனாலயே எனக்கு அப்பாவிடமான நெருக்கம் அதிகம். சினிமா பார்ப்பதில் இருந்து, ஹோட்டலில் சாப்பிடுவது, ஊர் சுற்றுவது, புத்தகம் படிப்பது என எல்லாமே அப்பாவின் அறிமுகம் தான். நான் திருச்சியில் படித்து கொண்டிருந்த சமயம் ஸ்கூல் லீவ் விட்டுட்டாங்க. அப்பா தான் அழைத்து போக வந்துருந்தார். வரும்போதே அம்மாவை தஞ்சாவூர் ஹாஸ்பிடலில் செக்கப் பண்ணி விட்டு ப்ளட் டெஸ்ட் எடுப்பதற்காக விட்டுவிட்டு வந்திருந்தார். நான் வர வழியெல்லாம் அது வேணும் இது வேணும்ன்னு ஏகப்பட்டது வாங்கி கொண்டேன். கடைசியில் ஊருக்கு போக காசு இல்லை. அதையும் அவர் என்கிட்ட சொல்லவில்லை. அதான் அம்மாவ தஞ்சாவூர்ல விட்டுட்டு வந்திருக்கோமே அவங்ககிட்ட காசு இருக்குன்னு தைரியம். எல்லாத்தையும் முடிச்சிகிட்டு அம்மாவை விட்டுட்டு வந்த ஹாஸ்பிடலுக்கு போனோம். அங்க போனா வேலை சிக்கீரம் முடிஞ்சிட்டதால அம்மா முன்னாடியே கிளம்பி போய்ட்டாங்க. அப்பவும் அவர் என்கிட்ட எதுவும் காட்டிக்கல. நான் அப்ப கூட பாதம்கீர் வேணும்ன்னு கேட்டேன் சிரிச்சிகிட்டே கூட்டிட்டு போய் வாங்கி தந்தார். அப்புறம் பக்கத்துல ஒரு ப்ரண்ட் கடை இருக்கு அவரை போய் பார்த்துட்டு போகலாம்ன்னு சொல்லி அழைச்சிட்டு போனார். என்னை வெளியில நிக்க வச்சிட்டு அவர் மட்டும் போய் பேசிட்டு வந்தார். அப்புறம் நாங்க வீட்டுக்கு வந்துட்டோம். எனக்கு மறுநாள் என்னையும் எங்க அப்பாவையும் அம்மா திட்டும் போது தான், என்னால பணம் எல்லாம் செலவாகி அவர் ப்ரண்கிட்ட கடன் வாங்கிட்டு ஊருக்கு வந்த விசயமே தெரிஞ்சிது. அப்பா எப்பவுமே இப்படி தான் அவர் கஷ்டத்தை என்கிட்ட காட்டினதே இல்ல. என்ன கேட்டாலும் இல்லை, அப்புறம் வாங்கிலாம்ன்னு சொன்னதும் இல்ல. கேட்பதற்கு கூட அவசியம் ஏற்பட்டதே இல்ல. அப்படி ஒரு பாதுகாப்பான வாழ்க்கையைத் தந்திருந்தார். அப்பா இல்லாமல் போன பிறகு எத்தனையோ கஷ்டங்கள். இன்று வரை பொருளாதாரத்திற்கான போராட்டம் முடியவில்லை. என் படிப்பு ஒன்று தான் எல்லாவற்றும் தீர்வாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். சில சமயம் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை இப்படி கஷ்டப்பட்டு வாழ்ந்து யாரை ஜெயிக்க போகிறோம் என்று கூட தோன்றும் ஆனால் எல்லாமே என் அப்பாவுக்காக தான். நான் என்னவாக வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டாரோ அதுக்காக தான்……………..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.