Wednesday 9 April 2014

அன்பெனப்படுவது



பேச எதுவுமே இல்லையென்றாலும்
பேசியே ஆகவேண்டும் என்றுணரும் பேரவஸ்தை
கோபத்தோடு நான்கு மணி நேரம் காத்திருந்தாலும்
கண்டதும் இயல்பாய் பூத்திடும் பெரும்புன்னகை
சண்டையிட்டு வேறு திசைப் பார்த்து பேசும்போதும்
கைகளை விலக்கி கொள்ள விரும்பாத பெரும்பிணைப்பு
எத்தனை பேர் சுற்றி இருந்தாலும் நீ இல்லாதபோது
நான் உணர்ந்து கொள்ளும் பெரும்தனிமை
என் முகம் நிமிர்த்தி முன் நெற்றியில் நீ முத்தமிடுகையில்
குழந்தையென நான் அடையும் பேருவகை
நீண்ட பிரிவுக்கு பிறகு உன்னை சந்திக்கும் நொடிகளுக்கு
முன்பு வரை எனக்குள் புதைந்து கிடக்கும் பெரும்தவிப்பு
ஒரு மழை நாளில் நீ எனக்கு வேண்டாம் என்று சொல்லி
எனக்குள் நீ நிகழ்த்திவிட்டு போன பெரும்கலவரம்
கடைசியாய் நீ பரிசளித்துவிட்டு போன பெரும்துன்பம்
எது நடந்தாலும் இப்போதும் உனக்காக என்னை
காத்திருக்க வைத்திருக்கும் பெரும்நம்பிக்கை

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.