Tuesday, 10 June 2014

நிலையாமைஇது இப்படி நிகழாமல் இருந்திருக்கலாம்

இது இவ்வளவு இன்பம் என்று தெரியாமல் இருந்திருக்கலாம்

இதில் இவ்வளவு காதல் இல்லாமல் இருந்திருக்கலாம்

இதில் உன்னை நீ உண்மையாக வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம்

இதில் நான் என்னை முழுமையாக இழக்காமல் இருந்திருக்கலாம்

அல்லது
திரும்ப நிகழும் வரை சந்திக்க போகும் துன்பங்களாவது

தற்போது நினைவுக்கு வராமல் இருந்திருக்கலாம்

Thursday, 10 April 2014

மலர்களுக்காகயாருமற்ற சாலையோரத்தில் மரத்தைச் சுற்றி
உதிர்ந்து கிடக்கின்றன மஞ்சள் மலர்கள்
ஒருவரும் அறிவதில்லை அதற்கும் மரத்திற்குமான உறவை
அது சிந்தப்பட்ட கண்ணீராய் இருக்கலாம்
தனிமைக்கான ஆறுதலாய் இருக்கலாம்
வழியனுப்பதலுக்கான பரிசாயிருக்கலாம்
இழப்பிற்கான அஞ்சலியாய் இருக்கலாம்
புதிய வருகைக்கான வரவேற்பாய் இருக்கலாம்
எதுவாகவும் அறியப்படுவதில்லை
அதற்கும் மரத்திற்குமான பிரிவாக கூட….

வலியுணர்தல்தடயங்களாக விட்டு சென்றது காயங்களையும், வலிகளையுமே
வார்த்தைகளின்றி வேறெதாலும் நீ இதை நிகழ்த்தவில்லை
ஆறவிடாமல் பார்த்து கொள்வதில் தான் என் கவனமெல்லாம்
சேகரிக்கிறேன் உன் முகம் தோன்றி மறையும்
ஒவ்வொரு துளி இரத்தத்தையும்
உன் தீண்டலின்போது அடைந்த சிலிர்ப்பை ஞாபகப்படுத்தி கொள்கிறேன்
வலியுணரும் வேளைகளிலெல்லாம்

ஆர்த்தியின் உலகம்ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆர்த்தியின் உலகம்
நாற்காலிகளால் நிறைந்தது…..
ஒவ்வொரு நாளும் அவளுக்கு ஒவ்வொரு நிறம் பிடிக்கும்
பிடித்த வண்ணங்களுக்கு ஏற்ப நாற்காலிகளும் மாறும்
ஆடும் நாற்காலி, ஓடும் நாற்காலி, சுழலும் நாற்காலி என
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்
பள்ளி போட்டிகளில் கூட பெயரைப் பார்த்து தான்
இசை நாற்காலி போட்டியில் தன் பெயரை பதிவு செய்திருந்தாள்
போட்டி ஆரம்பித்த போதே முடிவு செய்துவிட்டாள்
தன்னிடம் இல்லாத நிறமான பச்சை நாற்காலி தான் தனக்கென்று
முதல் சுற்றில் அவள் பச்சை நாற்காலிக்கு அருகில்
வரும்போதே இசை நிறுத்தப்பட
சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்து கொண்டாள்
அடுத்த முறை அதில் வினோதினி அமர்ந்து கொள்ள
எதிலும் அமராமல் உதட்டைக் கடித்து கொண்டே நின்றாள்
தோற்றதாய் வெளியெற்றப்பட
அப்பாவின் கழுத்தைக் கட்டி கொண்டு அழுகையினூடே கேட்டாள்
ஏன் எனது நாற்காலியை இங்கே எடுத்து வரவில்லையென
கடவுள் அவசர அவசரமாக தன் நாற்காலியின் வண்ணத்தை
பச்சையாக மாற்றி கொண்டிருந்தார் அவளுக்கு தர….

ஆட்டோக்காரர்கள்ஆட்டோக்காரர்கள் என்றாலே ஒரு பொதுவான கண்ணோட்டம் நம் எல்லோருக்குமே இருக்கிறது. இது எவ்வளவு பெரிய அபத்தம். எல்லா இடத்திலும் நல்லவர்கள், கெட்டவர்கள் கலந்தே இருக்கிறார்கள். ஒரு தொழிலை வைத்து அவர்கள் நல்லவர் அல்லது கெட்டவர் என்று அனுமானிக்கலாமா? அது முடியுமா?.. ஒவ்வொரு முறையும் வெளியூருக்கு கிளம்பும் போது வழியனுப்புபவர்கள் தவறாமல் கூறும் வார்த்தை ஆட்டோவில் போகும்போது கவனமாய் இரு என்பது தான். ஆனால் என் வாழ்வில் இதுவரை மோசமான ஆட்டோ டிரைவர்களை நான் சந்தித்ததே இல்லை.
திருநெல்வேலியில் படிக்கும் போது பஸ்ஸிலிருந்து இறங்கி பத்து நிமிடம் ஆட்டோவில் பயணித்து தான் காலேஜ் விடுதிக்கு செல்ல வேண்டும். எப்போதும் இரவு கிளம்பி விடியற்காலையில் தான் விடுதிக்கு செல்வேன். ஒரு முறை அந்த அதிகாலையில் வேறு வழியின்றி இருபது ரூபாய்க்கு ஐநூரு ரூபாயை பயத்தோடு நீட்டிய போது ‘வச்சிகல அடுத்த தடவ சேத்து வாங்கிக்கிடுதேன்’ என்று பயத்தை நீக்கி புன்னகை மலர செய்த ஆட்டோக்கார தாத்தா.
மதுரையில் ஒரு முறை நள்ளிரவில் பஸ்ரூட் தெரியாமல் பயத்தோடும் சந்தேகத்துடனும் ஆட்டோவில் ஏறி அமர்ந்த போது பத்திரமாக சேர வேண்டிய இடத்துக்கு அழைத்து சென்று விட்டுவிட்டு ‘ இப்படி நடுராத்திரியில எல்லாம் தனியா எங்கேயும் போகதம்மா’ என்று ஒரு தந்தையின் அக்கறையைக் கொட்டிவிட்டு போன ஆட்டோக்காரர்
ஒரு முறை தோழியை பாம்பு கடித்தபோது ஆட்டோவில் தான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து போனோம். அப்போதிருந்த அவசரத்திலும, குழப்பத்திலும் டிரைவரை சுத்தமாக மறந்து போனேன். மறுநாள் வழியில் பார்த்த போது ‘உன் பிரண்டு எப்படி இருக்கா?’ என்று அவர் இயல்பாய் கேட்க நான் குற்றவுணர்வுடன் ஐம்பது ரூபாயை எடுத்து தந்தபோது அதே காசில் எனக்கும் தோழிக்கும் டீ வாங்கி கொடுத்த அந்த ஆட்டோக்கார அண்ணன்… என என் வாழ்வில் நிறைய நல்ல ஆட்டோ டிரைவர்களையே சந்தித்திருக்கிறேன். யாராவது ஆட்டோ டிரைவர்களைப் பற்றி பொதுவாக தவறான கருத்தைச் சொல்லும் போதெல்லாம் மனசு கனத்து போகிறது. அவங்களும் நல்லவங்க தான் பாஸ் எண்ணத்தை மாத்திக்கோங்க

பெருகும் காதல் மழைபேருந்து கண்ணாடியில் பட்டு சடசடவென
பெரிதாகும் மழை துளியைப் போல
என்னுள் விஸ்வரூம் எடுக்கிறாய் நீ
உன்னுள் தொலைந்து போகிறேன் நான்